கொரோனாவை கட்டுப்படுத்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீன் மொத்த விற்பனை செய்யும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள்
Published on

கூட்டம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 4-ந்தேதி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் கூட்டம் நடந்தது.இதில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்றும், காசிமேடு துறைமுகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வருகை தரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

இதற்காக கீழ்கண்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* காசிமேடு துறைமுகத்துக்கான நுழைவு வாயில்கள் 2 அல்லது 3 ஆக குறைக்கப்படவேண்டும். மீதம் உள்ள நுழைவு வாயில்கள் மூடப்படவேண்டும் அல்லது இரும்புகளால் அடைக்கப்படவேண்டும்.

* நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களில் முறையாக தடுப்புகள் வைத்திருப்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்படவேண்டும்.

* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ள மீனவர்கள், மொத்த வியாபாரிகள், விற்பனையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். எந்த சூழலிலும் மொத்த விற்பனை செய்யும் இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது.

* துறைமுகத்துக்கு வருபவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கார்களை நிறுத்த தனி இட வசதி ஏற்படுத்தவேண்டும்.

* மொத்த வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மட்டுமே ஏலம் விடப்படும் இடத்துக்கு அனுமதிக்கப்படவேண்டும்.

தடுப்பூசி

* கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏலம் விடுவது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நடத்தப்படவேண்டும்.

* கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மீன்பிடித்துக்கொண்டு படகுகள் ஒரே நேரத்தில் வருவதை குறைக்க வேண்டும்.

* மீன்கள் இறக்கப்படும் இடத்தில் கூடுதல் தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

* சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், முககவசம் அணியவேண்டும், கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அறிவிப்பு செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

* மீன்பிடி துறைமுகத்துக்கு தொடர்ச்சியாக வரும் மீனவர்கள், விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

போலீஸ் பாதுகாப்பு

* ஏற்கனவே உள்ள சில்லரையாக மீன் விற்பனை செய்யும் இடத்தில் தற்காலிக கூரைகள் கூடுதலாக வேயப்படவேண்டும்.

* சில்லரையாக மீன் விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் மொத்த விற்பனை செய்யப்படும் இடங்கள் வேலிகளால் தனித்தனியாக பிரித்து வைக்கப்படவேண்டும்.

* மீன் விற்பனை மற்றும் ஏலம் நடைபெறும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

* மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்கங்களை சேர்ந்தவர்களிடம் கூட்டங்களை நடத்தி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விளக்கவேண்டும்.

* மீன்பிடி துறைமுக வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படவேண்டும். தடுப்பூசி போடாத நபர்களிடம் தடுப்பூசி போடுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும்.

இதனை மீன்வளத்துறை இணை இயக்குனர், உதவி இயக்குனர், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அதிகாரிகள் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com