

கோவை,
பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து தனது முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கோவை சிந்தாமணி சந்திப்பில் நடந்த தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ், இளைஞர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் நா.முருகவேல், வக்கீல்கள் கணேஷ்குமார், மகுடபதி மற்றும் கார்த்திகேயன், வடகோவை ஜார்ஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவின் உருவப்படத்தை அவர்கள் கிழித்து தீ வைத்தனர். மேலும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது அவர்கள் திடீரென்று மேட்டுப்பாளையம் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்று பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கோவை கணபதி 8-வது பகுதி தி.மு.க. சார்பில் 3-ம் எண் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பகுதி செயலாளர் கோவை லோகு தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு முன்னிலை வகித்தார். இதில், செல்வமணி, ராஜவேல். முருகன், பார்த்தீபன், தினேஷ், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் உதயகுமார் தலைமையிலும், காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார், காந்திபார்க்கில் முன்னாள் கவுன்சிலர் வி.பி.செல்வராஜ், பீளமேடு புதூரில் முருகேசன், சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.சாமி, ஆத்துப்பாலத்தில் மகாலிங்கம், இடையர்பாளையம் பிரிவில் லோகு, அம்மன்நகர் பஸ் நிலையம் முன்பு கதிர்வேல், வைசியாள் வீதி-கே.ஜி. தெரு சந்திப்பில் முருகேசன் ஆகியோர் தலைமையிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் ஷெரீப் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் அப்துல்காதர், மேற்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராகிம், இணை செயலாளர் மீன்கரீம், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவுப் நிஸ்தார் மற்றும் நிர்வாகிகள் அப்துல்ரகீம், இப்ராகிம் பாதுஷா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது எச்.ராஜாவின் உருவப்படத்தை கிழித்து எறிந்தனர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி அவர்கள கோஷங்கள் எழுப்பினார்கள்.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசும்போது, பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவை கோர்ட்டு முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வக்கீல்கள் கணேஷ்குமார், வெண்மணி, பாலமுருகன் மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எச்.ராஜாவை கைது செய்ய கோரி கோஷமிட்டனர். மேலும் அவர்கள், எச்.ராஜாவின் உருவப்படத்தை எரித்தனர். இதேபோல எச்.ராஜாவை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கோவை சுந்தராபுரத்தில் மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.