குன்னூர், கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பஸ்சில் வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது

ஊட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட குன்னூர், கோத்தகிரியில் இருந்து பஸ்சில் வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர், கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பஸ்சில் வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது
Published on

ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அலுவலக பணிகள் மற்றும் பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பஸ்கள் மற்றும் வாகனங்களில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று வந்தனர். இதையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததோடு, அவர்களை கைது செய்ய வேன்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் குன்னூரில் இருந்து வந்த அரசு பஸ்களை தடுத்து, பஸ்சில் இருந்த அரசு ஊழியர்களை கட்டாயமாக கீழே இறக்கி போலீசார் கைது செய்தனர்.

இதனால் பஸ்சில் நின்று கொண்டு குழந்தைகளுடன் பயணித்த பெண்கள், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அதனை தொடர்ந்து கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை தேவாங்கர் மண்டபத்துக்கு முன்பு மறித்து பஸ்சில் இருந்த அரசு ஊழியர்களை கீழே இறங்கும் படி போலீசார் கட்டாயப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பஸ்சில் வந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் பஸ்சில் இருந்து இறக்கப்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்களை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் முன்கூட்டியே கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதற்கிடையே ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் 62 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் செய்ய சேரிங்கிராஸ் பகுதியை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஊட்டி-குன்னூர் சாலை சேரிங்கிராசில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் என்று கோஷங்களை எழுப்பினர். ஊட்டியில் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 410 பெண்கள் உள்பட மொத்தம் 620 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் உதவி பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவ-மாணவிகள் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட சம்பவங்களால் ஊட்டி சேரிங்கிராசில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காலை 11 மணிக்கு வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்த திரண்டனர். இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் நின்றிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 566 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே போராட்டத்தை முன்னின்று நடத்தும் சங்க நிர்வாகிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்கள் நள்ளிரவு கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com