அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம் கொரோனா 3,4-வது அலை வந்தாலும் சமாளிப்போம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

கொரோனா 3,4-வதுஅலை வந்தாலும் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம் கொரோனா 3,4-வது அலை வந்தாலும் சமாளிப்போம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் கொரோனா போராளிகளாக அறிவிக்கப்பட்டு கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் செவிலியர்கள் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன்குமார் வரவேற்றார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தலையில் கிரீடம் சூட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா போரில் முன்னெடுத்து செல்லும் செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன். நான் கவர்னர் மட்டுமல்ல, டாக்டரும்தான். செவிலியர் பணியை மிக உயர்வாக கருதுகிறேன். நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது ஊசி போடுவதற்கு கூட செவிலியரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

வரும்கால மருத்துவ உலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செவிலியர்கள் செயல்பட வேண்டும். ஈடுபாட்டுடன் பணியை செய்யும் செவிலியர்கள் தங்கள் உடல்நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். ஒரு சில செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதை கேள்விப்படும்போது மிகுந்த வருத்தமடைகிறேன்.

அரசு எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். அரசும், சுகாதாரத்துறையும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது. இதனால் சிலர் அரசின் மீது குறைகளைக் கூறி வருகின்றார்கள். அவர்கள் குறைகளை கூறுவதற்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மத்திய அரசு ஜிப்மருக்கு 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர் வழங்கியது. மாநில அரசுக்கு தற்போது 40 ஆக்சிஜன் ஜெனரேட்டர் வழங்கியுள்ளது. பிரதமர் நல நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளோம். மாநிலத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்துள்ளோம். இதனால் 3, 4-வது அலை வந்தாலும் கொரோனாவை சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கிருந்த செவிலியர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா? என விசாரித்தார். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

முடிவில் அன்னை தெரசா செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் ஜெயந்தி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com