

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ சிகிச்சை
கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 17 ஆயிரத்து 230 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48 ஆயிரத்து 905 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 54 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 41,699 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 57 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 909 அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 22.51 ஆக அதிகரித்துள்ளது.
39 பேர் உயிரிழந்தனர்
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பாகல்கோட்டையில் 610 பேர், பல்லாரியில் 1,141 பேர், பெலகாவியில் 791 பேர், பெங்களூரு புறநகரில் 828 பேர், பெங்களூரு நகரில் 22,427 பேர், பீதரில் 377 பேர், சாம்ராஜ்நகரில் 917 பேர், சிக்பள்ளாப்பூரில் 734 பேர், சிக்கமகளூருவில் 251 பேர், சித்ரதுர்காவில் 445 பேர், தட்சிண கன்னடாவில் 888 பேர், தாவணகெரேயில் 514 பேர், தார்வாரில் 1,523 பேர், கதக்கில் 318 பேர், ஹாசனில் 2,016 பேர், ஹாவேரியில் 297 பேர், கலபுரகியில் 1,007 பேர், குடகில் 939 பேர், கோலாரில் 1,547 பேர், கொப்பலில் 279 பேர், மண்டியாவில் 2,186 பேர், மைசூருவில் 2,797 பேர், ராய்ச்சூரில் 276 பேர், ராமநகரில் 187 பேர், சிவமொக்காவில் 444 பேர், துமகூருவில் 2,645 பேர், உடுப்பியில் 1,392 பேர், உத்தரகன்னடாவில் 747 பேர், விஜயாப்புராவில் 212 பேர், யாதகிரியில் 170 பேர் உள்ளனர்.
கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 8 பேரும், தட்சிண கன்னடாவில் 4 பேரும், மைசூருவில் 3 பேரும், சிக்பள்ளாப்பூர், கலபுரகி, மண்டியா, ராமநகர், உத்தரகன்னடாவில் தலா 2 பேரும் என மொத்தம் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் அதிகரிப்பு
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்து 400 ஆக குறைந்த நிலையில் அது நேற்று மீண்டும் அதிகரித்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் 8,656 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 1 வயது முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் 10 வயதில் இருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவுக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதன்படி, கடந்த 15 நாட்களில் மட்டும் 47 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் பெற்றோர் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.