

குத்தாலம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் 60 நரிக்குறவர் இன குடும்பத்தினர் உள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால்
நரிக்குறவர் இன மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். நரிக்குறவர் இன மக்கள் பறவைகள் வேட்டையாடுவதையும், சிறு வியாபாரத்தில் ஈடுபடுவதையும் தான் வழக்கமாக கொண்டிருந்தனர். பறவைகளை வேட்டையாடுவதை தற்போது அரசு தடை செய்து விட்டதால்
அவர்கள் வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டனர்.
ஆனால் மக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் கோவில் விழாக்களுக்கு சென்று பெண்களுக்கு தேவையான ஸ்டிக்கர் பொட்டு, நெய்ல்பாலிஸ், கிளிப், ஊக்கு, பாசி மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கோடைக்காலங்களில் அதாவது பங்குனி, சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் கடைபோட்டு வியாபாரம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதுவே அவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாகும். கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் தற்போது நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவு நரிக்குறவர் இன மக்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது. மேலும் வியாபாரம் இன்றி வெளியே செல்ல முடியாமல் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே முடங்கி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நரிக்குறவர் இன மக்கள் கூறியதாவது:-
பொதுவாக இடம் பெயர்தல் எங்களின் இயல்பாக இருந்தாலும், நாங்கள் 60 குடும்பத்தினர் நிரந்தர குடியிருப்பில் தான் வசித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் மயிலாடுதுறை பஸ் நிலையம், திருவிழந்தூர், ரெயிலடி பகுதிகளில் கொட்டகை அமைத்து அதில் வசித்து வந்தோம்.
1994-ம் ஆண்டு மயிலாடுதுறை உதவி கலெக்டராக இருந்த உமாசங்கர் எங்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் தங்க ஏற்பாடு செய்ததோடு, அரசு சார்பில் வீட்டுமனை பட்டாவும் வழங்கினார். அதில் இருந்து பல்லவராயன்பேட்டை கிராமத்திலேயே குடிசை அமைத்து நிரந்தரமாக வசித்து வருகிறோம். வியாபாரத்திற்கு தேவையான ஊசி மணி, பாசி மணி, ஊக்கு, சுமங்கலி பொருட்கள், தூண்டில் நரம்பு, தூண்டில் முள் போன்ற பொருட்களை மயிலாடுதுறை, கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தோம். பச்சை குத்துதல் கூட எங்கள் பாரம்பரிய தொழில்தான். ஆனால் தற்போது அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகியதால் அந்த தொழிலும் எங்களிடம் இருந்து பறி போய்விட்டது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எங்களுக்கு பிச்சை எடுக்கும் பழக்கம் மட்டும் கிடையாது. தற்போதைய ஊரடங்கால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கே சிரமப்பட்டு வருகிறோம். ஒரு சிலர் எங்களுக்கு அரிசி, காய்கறி ஆகியவற்றை உதவியாக தருகிறார்கள். அதை பெற்று வாழ்க்கை நடத்துகிறோம். ஆனால் இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.