கொரோனா ஊரடங்கால், கொள்முதலுக்கு வியாபாரிகள் வரவில்லை: வேதாரண்யத்தில், மரத்திலேயே பழுத்து வீணாகும் மாங்காய்கள் - விவசாயிகள் கண்ணீர்

கொரோனா ஊரடங்கால் கொள்முதலுக்கு வியாபாரிகள் வராததால் வேதாரண்யத்தில் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து வீணாவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால், கொள்முதலுக்கு வியாபாரிகள் வரவில்லை: வேதாரண்யத்தில், மரத்திலேயே பழுத்து வீணாகும் மாங்காய்கள் - விவசாயிகள் கண்ணீர்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம், செட்டிப்புலம், புஷ்பவனம், நாலுவேதபதி, செம்போடை, தேத்தாகுடி உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மாங்காய்கள் தமிழக பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். வேதாரண்யம் பகுதியில் ருமேனியா, செந்தூரா, பங்கனப்பள்ளி, ஒட்டு, நீலம் உள்ளிட்ட ரக மாங்காய்கள் அதிக அளவில் விளைகின்றன.

ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் அனைத்து ரக மாங்காய்களும் அதிக விளைச்சல் கண்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். சீசன் நேரத்தில் வெளியூர் வியாபாரிகள் பலர் வேதாரண்யம் வந்து மாங்காய்களை கொள்முதல் செய்வார்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் வேதாரண்யம் பகுதியில் தற்போது மாங்காய்கள் காய்த்து குலுங்குகின்றன. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா ஊரடங்கால் மாங்காயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்ல.

இதன் காரணமாக மாங்காய்கள் தேக்கம் ஏற்பட்டு மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மாங்காய் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. ருமேனியா வகை மாங்காயை வாங்குவதற்கு ஆளே இல்லை. நாட்டு ரக நீலமாங்காய் கிலோ ரூ.6, ஒட்டு மாங்காய் ரூ.10, பங்கனப்பள்ளி ரூ.15 என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் வேதாரண்யம் பகுதியில் 500 டன் ருமேனியா மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ருமேனியா வகை மாங்காயை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எதிர்பார்த்த அளவு கொள்முதல் இல்லாததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் மாங்காய்களை விற்பனை செய்ய தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். அரசே கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com