

பெரம்பூர்,
சென்னையில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 57). இவர், கொத்தவால்சாவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த 9-ந்தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசாதனை செய்யப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையின்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் 7 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். அதில் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி என்பவர்தான் போலீஸ்காரர்களில் முதலில் கொரோனாவுக்கு பலியானார்.
தற்போது நிலவி வரும் கொரோனா 2-வது அலையிலும் சென்னை போலீஸ்காரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் 2-வது அலையில் கொரோனாவால் போலீஸ் துறையில் பலியான முதல் நபர் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.