தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்வு

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 173 ஆக உயர்ந்தது.
தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்வு
Published on

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியில் கற்பகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 33 வயது வாலிபர், 29 வயதுள்ள அவரின் தம்பி ஆகியோர் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஆற்காடு, வாலாஜா கிளையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்தசில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தனியார் மையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றனர்.

இதையடுத்து கொரோனா சந்தேகத்தின்பேரில் 20-ந்தேதி செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அண்ணன், தம்பி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கீழ்புதுப்பாக்கம் மேட்டுகாலனி பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் கொரோனா தொற்று இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சர்மிளா தலைமையில் டாக்டர் கோகிலா, மருத்துவக் குழுவினர் மேற்கண்ட பகுதிகளுக்குச் சென்று 3 பேரை மீட்டு ஆம்புலன்சில் செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவக் குழுவினர் கற்பகவிநாயகர் கோவில் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தினர். அண்ணன், தம்பி குடும்பத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆற்காடு, வாலாஜா கிளை நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 170 ஆக இருந்தது. புதிதாக 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com