புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அப்பாவி மக்களின் பணத்தை அட்டைபோல் உறிஞ்சும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்து சட்டம் கொண்டு வந்துள்ளார். புதுவையிலும் மக்கள் ரம்மி, லாட்டரி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களினால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். பலர் தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய பலர் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்துள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடையின்றி நடத்த முடியும். எனவே ஐகோர்ட்டு பரிந்துரையின்படி புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தடை விதிக்கவேண்டும்.

ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியாக இருந்துவிட்டு ஆட்சி முடியும் தருவாயில் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர சட்ட மசோதா கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பியதாக தற்போது நாராயணசாமி பொய் கூறுகிறார். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. கொடுத்த தனிநபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக மட்டும் நிறைவேற்றினார்கள். தீர்மானம் என்பது வேறு. சட்ட மசோதா என்பது வேறு. மருத்துவ கல்வியில் 50 சதவீத இடங்களை பெற சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டதை ஆதாரத்துடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிரூபிப்பாரா?

எதிர்காலத்தில் புதுவையில் இயங்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு இடம்கூட கிடைக்காத வகையில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவையில் முடிவு எடுத்துவிட்டு தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு இடங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பொய் கூறுகிறார்.

புதுவையில் இயங்கும் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் 50 சதவீத இடங்களை பெறவும், நிகர்நிலை பல்கலைக்கழகம் என்பதற்கு மாற்றாக தனியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அரசு எடுக்கும் முடிவை தடுக்க கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் இந்த சுயநலமான முடிவை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்க்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com