மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு

மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு
Published on

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 28 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த 38 வயது நபர், மற்றொருவர் செல்லூர் பகுதியை சேர்ந்த 21 வயது நபர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நோய் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.மற்ற 2 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தெற்குவாசல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 51. மற்றொருவர் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்ட போது இவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என தெரியவருகிறது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து அவர்கள் வசித்த செல்லூர், மேலமாசி வீதி, பழங்காநத்தம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுபோல் காவல் நிலையத்தில் அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மேலவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மதுரையில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து தற்போது மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com