நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த 49 வயது நபர் சென்னையில் இருந்து குடும்பத்துடன் தனது மனைவியின் சொந்த ஊரான வடக்கு விஜயநாராயணத்துக்கு வந்தார். தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், அவரை முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடங்குளத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது மனைவி, 2 மகன்களுடன் உரிய அனுமதியுடன் அங்கிருந்து சொந்த ஊரான கூடங்குளம் நோக்கி வந்தார். நெல்லை மாவட்ட எல்லையில் வந்தபோது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏர்வாடியை சேர்ந்த ஒருவர் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் நெல்லை மாவட்ட எல்கையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனால் பாதிக்கப்பட்ட 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்தது.

தென்காசி மாவட்டத்தில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிவகிரியை சேர்ந்த 27 வயது பெண் 5 மாத கைக்குழந்தையுடனும், புளியங்குடியைச் சேர்ந்த 23 வயது பெண் 2 மாத கைக்குழந்தையுடனும் கொரோனா வார்டில் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து கர்ப்பிணி ஒருவர் துக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கிராமத்துக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 33 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com