சேலத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

சேலத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
சேலத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
Published on

சேலம்,

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள், தாய்-மகன் என 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் ஏற்கனவே 23 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனிடையே மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்து வந்த பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அவர் தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓமலூர் தாலுகா கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் மேட்டூர் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர் குழுவினர் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொ ரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

இதனிடையே கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த குகை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை கைத்தட்டி மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டீன் பாலாஜிநாதன் கூறும்போது, சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் 2 முறை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். இதில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். மேலும் 28 நாட்கள் கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருந்தால் சிவப்பு மண்டலமாக இருக்கும் சேலம் பச்சை மண்டலமாக மாற்றி அறிவிக்கப்படும். எனவே அரசின் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com