ஈரோடு மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 17 பேருக்கு கொரோனா: சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வாலிபர் ஒருவர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 17 பேருக்கு கொரோனா: சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3 பெண்கள், 85 வயது முதியவர் உள்பட 5 பேர் பாதிக்கப்பட்டனர். சத்தியமங்கலத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேரும், புஞ்சைபுளியம்பட்டியில் 2 வயது ஆண் குழந்தை, 6 வயது சிறுமி, 11 வயது சிறுவன் உள்பட 5 பேரும், மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் 48 வயது ஆணும், நம்பியூரில் 40 வயது பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புதிதாக 17 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்தது. இதில் 211 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 12 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள்.

இதற்கிடையே ஈரோடு மூலப்பாளையம் காந்திநகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவரும், ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த 38 வயது பெண்ணும், திருநகர் காலனியை சேர்ந்த 58 வயது தொழிலாளியும், ஈரோட்டை சேர்ந்த 44 வயது பெண்ணும், மொடக்குறிச்சி அருகே உள்ள முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த 74 முதியவரும் என 5 பேர் இறந்தனர். மேலும் வாலிபர் ஒருவர் இறந்ததால், ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உள்ள பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால், மேல்சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மையம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. அந்த கருவியில் ஒரு மணிநேரத்துக்கு 2 பரிசோதனைகளை மட்டுமே செய்ய முடியும். எனவே டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்வதற்காகவும், அவசர பரிசோதனைக்காகவும் மட்டும் அந்த கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com