விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை தொகையை வழங்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை தொகை, மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை தொகையை வழங்க வேண்டும்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 5,93,363 பேர் பயனடைவார்கள். இவை வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் கொரோனா நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடையாள குறியீடுகள்

ரேஷன் கடைகளில் கண்டிப்பாக சமூக விலகலை பின்பற்றியே நிவாரண நிதியை வழங்க வேண்டும். இதற்காக ரேஷன் கடைகள் முன்பு அடையாள குறியீடுகளை வரைய வேண்டும். எந்த கடையிலும் கூட்டம் சேரக்கூடாது. ஆண்கள், பெண்களை தனித்தனி வரிசையில் நிற்க வைத்து வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்தால் அவர்களை வரிசையில் நிற்கச்சொல்லி காக்க வைக்காமல், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக வழங்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் எந்த தெரு மக்களுக்கு வழங்கப்படுகிறது என்ற விவரத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையில் எழுதப்பட வேண்டும். ரேஷன் கடையின் முன்பு நிழல் இல்லாத இடங்களில் சாமியானா பந்தல் போட வேண்டும். தேவைப்பட்டால் பொதுமக்களை வரிசையில் ஒழுங்குப்படுத்த தடுப்புகள் அமைக்கலாம். குடிதண்ணீர் வசதியையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

புகார்

ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாதுகாப்புடன், இந்த நிவாரண நிதி வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுபடாமல், அதேநேரத்தில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் இந்த நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுடைநம்பி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com