

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவ ராவ் அந்த பகுதி மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அவரவர் வீடுகளுக்கு நேரிடையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜன், செஞ்சிலுவை சங்க சேர்மன் ஹாருன், செயலாளர் ராக்லாண்ட் மதுரம், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.