லாரி டிரைவருக்கு கொரோனா அறிகுறி? - தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மொரப்பூர் அருகே முதல் கட்ட பரிசோதனையில் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்பட்ட லாரி டிரைவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
லாரி டிரைவருக்கு கொரோனா அறிகுறி? - தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் ஓசூரில் இருந்து மதுரை, சங்ககிரி ஆகிய பகுதிகளுக்கு காய்கறி லாரியை ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் இருந்து வந்த இவரை தனிமைப்படுத்தி ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலெக்டர் மலர்விழி, அரூர் உதவி கலெக்டர் பிரதாப், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி உள்ளிட்டோர் நேற்று மொரப்பூர் பகுதிக்கு நேரில் சென்று அந்த லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் அவர் நேற்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டார்.

இதுதொடர்பாக மருத்துவத்துறையினர் தரப்பில் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவருக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் லாரி டிரைவர் வசிக்கும் எலவடை கிராமம் நேற்று இரவு தனிமைப்படுத்தப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருந்து யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் முதன்முதலில் ஒருவர் அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் தர்மபுரி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com