

நாமக்கல்,
தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த மாதம் இறுதியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதம் தொடக்கத்தில் இரட்டை இலக்கமாக மாறியது. கடந்த 16-ந் தேதி அது 3 இலக்கமாக மாறி தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டியது.
அதிர்ஷ்டவசமாக உயிர் பலி அதிகரிக்கவில்லை என்றாலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 109 பேர் மட்டுமே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சேலம், கரூர், கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிறப்பு சிகிச்சை மையம்
இதற்கிடையே நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி ஆகிய 4 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறக்க கலெக்டர் மெகராஜ் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அங்கு 88 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
1,235 படுக்கைகள் தயார்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 110 படுக்கைகள், இதர அரசு ஆஸ்பத்திரிகளில் 246 படுக்கைகள், 8 தனியார் ஆஸ்பத்திரிகளில் 319 படுக்கைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்களில் 560 படுக்கைகள் என மொத்தம் 1,235 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
தற்போது 109 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதால், சிறப்பு சிகிச்சை மையங்களை ஒவ்வொன்றாக திறக்க முடிவு செய்து உள்ளோம். முதலில் நாமக்கல்லில் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட தொடங்கும். அதில் 3 டாக்டர்கள், 3 செவிலியர்கள் வீதம் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே 40 வயதுக்கு குறைவான, இணை நோய் இல்லாத, ஸ்கேன் ரிப்போர்ட்டில் எவ்வித பாதிப்பும் இல்லை என கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள் 81 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.