

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் மிக தீவிரமாக இருக்கிறது. அதனால் அரசு-தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
நிலைமையை சமாளிக்க கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா கண்காணிப்பு மையங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் பெங்களூரு மாநகராட்சி அமைத்துள்ளது.
இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி மையங்களில் இளைஞர்கள், வயதானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் குவிந்து வருகிறார்கள்.
ஆனால் அந்த மையங்களின் முன்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று தகவல் பலகையை வைத்துள்ளனர். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதிலும் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரது தலைமையில் இந்த போராட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த தர்ணா போராட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் இன்னும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி கிடைக்கவில்லை.
முதல் டோஸ் பெற்றவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை. தடுப்பூசி மையங்கள் முன்பு ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள்.
பிரதமர் மோடியும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் மக்களுக்கு பொய் தகவல்களை கொடுக்கிறார்கள். தலைமை செயலாளர், 3-வது வாரத்தில் தான் தடுப்பூசி வருவதாக சொல்கிறார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், இன்னும் 15 நாட்கள் தடுப்பூசி வினியோகம் செய்ய இயலாது என்று கூறுகிறார். இது ஒரு பொறுப்பான அரசு என்று கூற முடியுமா?
மற்றொருபுறம் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு நிபுணர் குழுக்கள் அறிக்கை வழங்கின. ஆனால் இந்த அரசுகள் நிபுணர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டன. அதன் விளைவு தான் இன்று நாட்டில் கொரோனா பாதிப்பு தாண்டவமாடுகிறது.
நாடு இத்தகைய மோசமான நிலையில் சிக்கியுள்ளதற்கு பிரதமர் மோடியே காரணம். மத்திய அரசு நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்பது இல்லை. அதனால் மருத்துவ நிபுணர்கள் எதையும் கூறாமல் அமைதியாகிவிட்டனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நான் வலியுறுத்தினேன். இதை எடியூரப்பா நிராகரித்துவிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மந்திரிகளை எடியூரப்பா நியமனம் செய்துள்ளார். ஆனால் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.
நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படாத காரணத்தினால் தான் இந்த விஷயத்தில் மாநில ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டுள்ளது.
கர்நாடகத்தில் 18 வயது நிரம்பியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சம் ஆகும். இவர்களுக்கு வழங்க 6 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கினால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இந்த போராட்டத்தில், காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராமலிங்கரெட்டி, சலீம் அகமது, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், முன்னாள் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, நசீர்அகமது, தினேஷ் குண்டுராவ், எச்.எம்.ரேவண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.