இ-பாஸ் பெற கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம்: ஈரோடு மாவட்ட கலெக்டர் தகவல்

இ-பாஸ் பெற கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இ-பாஸ் பெற கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம்: ஈரோடு மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் 2-வது கட்டமாக கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதில், உண்மை தன்மை அறியப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் இ-பாஸ் வாங்குவதற்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

பள்ளிபாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு ஏராளமானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதத்தை இணைத்து விண்ணப்பித்தால், வேலைக்கான பாஸ் வழங்கப்படும். மேலும், தொழில் சம்பந்தமாகவும், திருமணம், இறப்பு, மருத்துவம் தொடர்பாகவும் பிற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வர இ-பாஸ் விண்ணப்பித்தால் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று உறுதி அளிக்கப்பட்ட சான்றிதழை விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும். இதையடுத்து முழுமையான விசாரணைக்கு பிறகே இ-பாஸ் வழங்கப்படும்.

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், 16-ந் தேதி வரை தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வீடு, வீடாக சென்று கியாஸ் வினியோகம் செய்வதால், அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com