கொரோனா தடுப்பூசி போடும் பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்
Published on

புதுச்சேரி,

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதை முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்த மத்திய அரசு அறிவித்தது. இதன்படி புதுவையில் 2 முறை தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கிவைத்தார். புதுவையில் தடுப்பூசி போடும் பணி தொடக்க நிகழ்ச்சி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று நடந்தது.

அங்கு பிரதமர் நரேந்திரமோடியின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். புதுவையில் முதன்முதலாக கள விளம்பர உதவியாளர் முனுசாமி (வயது 59) என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியின் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் முரளி ஊசிபோட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அங்கேயே சிறிது நேரம் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட முனுசாமி கூறும்போது, எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இருந்தபோதிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இது சாதாரண ஊசி போன்றுதான் உள்ளது. இதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

புதுவை மாநிலத்தில் அரசு பொதுமருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை, மாகி அரசு மருத்துவமனை, ஏனாம் அரசு மருத்துவமனை ஆகிய 8 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

புதுவை அரசின் சுகாதார ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் என 24 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி முதல்கட்டமாக போடப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு 100 ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த தடுப்பூசி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை போடப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே, நிறுவன முதல்வர் பங்கஜ் குந்த்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் நாளான நேற்று பல்வேறு நிலைகளில் வேலை செய்யக்கூடிய 100 முதல் நிலை மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க தொடர்ந்து நடைபெறும் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com