கொரோனா அச்சுறுத்தல்; ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய தூத்துக்குடி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தூத்துக்குடி வெறிச்சோடி காணப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே காய்கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல்; ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய தூத்துக்குடி
Published on

தூத்துக்குடி,

கொரோனா வைரசால் உலக அளவில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய அரசு பேரிடராக அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றுதலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கின் 2-ம் நாளான நேற்று தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்களான மருந்துகடைகள், காய்கறி கடைகள், பால்கடைகள், பெட்ரோல் பங்க்குகள், அம்மா உணவகங்கள், ரேசன் கடை உள்ளிட்டவைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பதற்காக அடையாளமிடப்பட்டு இருந்தது. அடையாளமிடப்பட்ட இடத்தில் இருந்து பொருட் களை வாங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளான பாலவிநாயகர் கோவில் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, எட்டயபுரம் சாலை, திருச்செந்தூர் ரோடு உள்ளிட்ட சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசிலர் அவ்வபோது மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். அவர்களை ரோந்து பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களை போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தேவை இல்லாமல் வெளியே வருபவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்றும் கூறினார் கள். நகரின் முக்கிய சாலைகள் இரும்பு தடுப்பு கொண்டு மூடப்பட்டன. தேவை இல்லாமல் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்த அவ்வாறு அமைக் கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நகர் பகுதிகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வாகனங்களில் ரோந்து வந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை எடுத்து கொண்டு இருந்தனர்.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. வியாபாரம் மும்முரமாக நடந்தது. மார்க்கெட்டில் பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க ஒவ்வொரு நபருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு வட்டமிடப்பட்டு இருந்தன. அதில் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல அறிவுரை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மார்க்கெட் பகுதிகளில் முக கசவம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்தும் கைக்குட்டைகளை முக கவசமாக அணிந்தும் நீண்ட வரிசையில் காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர். அங்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கி வந்தனர்.

மேலும் மாநகராட்சி சார்பில் மார்க்கெட் பகுதியில் கிருமிநாசினி அவ்வபோது தெளிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரோடாபாய் ஜெயசித்ரா மற்றும் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு பின்னர் மார்க்கெட் அடைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com