சேலத்தில் என்ஜினீயருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது

சேலத்தில் நேற்று என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
சேலத்தில் என்ஜினீயருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொளசம்பட்டி கிழக்கு ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். 2 மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்த அவர், ஊரடங்கு உத்தரவால் பெங்களூருவுக்கு திரும்ப முடியவில்லை.

இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் வேலைக்கு வரக்கூறினார்கள். இதனால் அவர் தாமாக முன்வந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்ய கூறி உள்ளார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த என்ஜினீயர், விடுமுறையில் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார் என்று விசாரணை நடத்தினர். இதில் அவர் பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள ஒரு மருந்துக்கடை மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துக்கடைக்காரர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு ஓலைப்பட்டி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள் என 34 பேர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 24 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு யாரேனும் சென்று வந்தார்களா? என்ற கணக்கெடுப்பிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com