

ஆத்தூர்,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் ஆத்தூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார். இவர்கள் சேலம் சூரமங்கலத்தில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் ஆத்தூர் வங்கி அதிகாரியின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவர் கோட்டயம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே அவரை பார்க்க வங்கி அதிகாரி கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கேரளா சென்று உள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கி இருந்து விட்டு ஆத்தூருக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கேரளாவில் வசித்து வந்த வங்கி அதிகாரியின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தனது மனைவிக்கு தொற்று இருப்பதை அறிந்து அவர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் ஆத்தூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றிய வங்கிக்கு சென்றனர். அங்கு பணியாற்றிய அலுவலர்கள் 11 பேரையும் வங்கியில் இருந்து வெளியேறக்கூறினர். பின்னர் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வங்கியை பூட்டினார்கள்.
மேலும் வங்கி அலுவலர்கள் 11 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றும், எனவே வங்கி அலுவலர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கி அதிகாரியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருந்ததால் வங்கியை அதிகாரிகள் பூட்டிய சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.