ஊட்டியில் கொரோனா சிகிச்சை மையமான தனியார் பள்ளி

ஊட்டியில் கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி மாற்றப்பட்டு உள்ளது.
ஊட்டியில் கொரோனா சிகிச்சை மையமான தனியார் பள்ளி
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த 110-க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த தொழிற்சாலை நிதி மேலாளர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் எல்லநள்ளி பகுதி கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இது தவிர கிராமப்புறங்களில் நடந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களிலும் தொற்று பரவும் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தொற்று உறுதியான 179 பேரில் 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ள 109 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ஊட்டி அரசு ஆஸ்பத்திரி, குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு 200 படுக்கை வசதிகள் உள்ளன.

இதற்கிடையே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறுகிய நாட்களில் அதிகரித்ததால், குன்னூர் அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா சிகிச்சை மையங்களை மேம்படுத்த வேண்டும், ஏற்கனவே உள்ள மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மையங்களில போதுமான அளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி பெர்ன்ஹில் ரவுண்டானா அருகே உள்ள தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டு காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வெண்டிலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து அந்த பள்ளி வளாகம் மற்றும் உள்புறத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வருகிற நாட்களில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com