கடம்பத்தூரில் வீடு தேடி மருத்துவ முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் வீடு தேடி மருத்துவம் முகாம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கடம்பத்தூரில் வீடு தேடி மருத்துவ முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி
Published on

தடுப்பூசி முகாம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினார்.

வீடு தேடி மருத்துவம்

கசவநல்லாத்தூர் பகுதியில் சுகாதார துறை சார்பில், வீடு தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர், அந்த பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது நல்ல மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு வீடுகளிலேயே வீடு தேடி மருத்துவக்குழு மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிறப்பு முகாம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 76 சதவீதம் பேர் முதல் தவணையை செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணையை 36 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 720 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைக்கு ஒரு நாள் இலக்காக 75 ஆயிரம் தடுப்பூசிகள் போட நிர்ணயிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக அவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இதனால் சுகாதார அதிகாரிகள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், டாக்டர். காந்திமதி, லட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com