மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரி,

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 10,583 சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணியாளர்கள் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 11,800 தடுப்பூசி டோஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாப்பாக வைப்பதற்கு 10 புதிய குளிர்பதன சாதனங்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தடுப்பூசி கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு மொத்தம் 448 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வள தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ கூடுதல் இயக்குனர் தேவா பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com