வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது டாக்டருக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டது

வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டது. முதல் ஊசி டாக்டருக்கு செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது டாக்டருக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டது
Published on

வேலூர்,

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு எனும் பெயரிடப்பட்ட தடுப்பூசி நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தடுப்பூசி போடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது.

இதற்காக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் வரவழைக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் ஏற்கனவே நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேண்ட் மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.

அங்கு, அவரது முன்னிலையில், முதல் தடுப்பூசி குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜுக்கும், 2-ம் தடுப்பூசி உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரமோகனுக்கும் மற்றும் அதைத்தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஒரு மையத்தில் 100 பேர் வீதம் 4 மையங்களில் 400 பேருக்கு போடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அரை மணி நேரம் கண்காணிப்புக்கு பின்னர் அனுப்பப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அனைத்து மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதில், மருத்துவமனை டீன் செல்வி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்பணி விரிவுபடுத்தப்பட்டு 18 ஆயிரம் முன் கள பணியாளர்களுக்கு போடப்படும். அதற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வருங்காலங்களில் தமிழக அரசு உத்தரவுப்படி தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com