ஈரோடு மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்
Published on

ஈரோடு,

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 மையங்களில் கொரானா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. முதல் கட்டமாக நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை ரோட்டில் உள்ள கேர் 24 ஆஸ்பத்திரியில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு முன் ஏற்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் செய்து காண்பிக்கப்பட்டது. கோவின் எனப்படும் செயலியில் தடுப்பூசி போடுபவரின் பெயர் பதிவு செய்தல். அவரது விவரங்கள் சரிபார்த்தல், உடல் நிலை பரிசோதனை, ஊசி போடும்போது செய்ய வேண்டிய நடவடிக்கை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஒத்திகை நேற்றுடன் முடிவடைந்தது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டியில் உள்ள நகர் நல மையம், பெருந்துறை ரோட்டில் உள்ள கேர் 24 தனியார் ஆஸ்பத்திரி ஆகிய 5 மையங்களில் தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்படுகிறது.

தடுப்பூசி போடும் போது ஏற்படும் கள சூழல் மற்றும் அதற்கான நடைமுறைகளை சோதனை செய்வதும், சவால்களை அடையாளம் காண்பதுவும் இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

தடுப்பூசி போடும்போது, மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு பாதகமான நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்தால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இந்த ஒத்திகையின் நோக்கமாகும். இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com