

நெகமம்
நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், துணை சுகாதார மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சில இடங்களில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
இந்த நிலையில் நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 120 முதல் 150 பேர் வரை போட்டு வந்தனர். இதே போல் புரவிபாளையம், ராமபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 25 முதல் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
எனவே நேற்று இங்கு ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி போட வந்தனர். ஆனால் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மீண்டும் போடப்படும்
நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, காட்டம்பட்டி, ராமச்சந்திராபுரம், வீதம்பட்டி, வேலூர், கோவில்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தடுப்பூசி போட ஏராளமானோர் வருகிறார்கள்.
இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
எனவே கூடுதல் தடுப்பூசி கேட்கப்பட்டு உள்ளது. அவை வந்ததும் மீண்டும் இங்கு தடுப்பூசி போடப்படும். இங்கு இதுவரை 1,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.