

புதுச்சேரி,
புதுவை அரசு சார்பில், தியாகி அன்சாரி துரைசாமியின் நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அஜந்தா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர் ஏ.பி.மகேஸ்வரி, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினயராஜ் மற்றும் அன்சாரி துரைசாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா சற்று வேகமாக பரவி வரும். இந்த காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
பரிசோதனை செய்து கொள்பவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளானது தெரியவந்தால் பதற்றமடைய வேண்டாம். தற்போது பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் வீட்டில் இருந்து தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. சிலர் ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்க அலைவதாக கூறுகிறார்கள். போதுமான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தினை பயன்படுத்துவது எப்படி என்று சில வழிமுறைகள் உள்ளது. அது தொடர்பாக இந்திய மருத்துவ கழகம் டாக்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் ஆக்சிஜன் அளவை அறியும் பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற கருவிகளை வைத்திருப்பது நல்லது. ஆக்சிஜன் அளவு 90-க்கு குறையும்போது மருத்துவமனைக்கு வந்தால் போதுமானது. ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அரசு வழங்கி வருகிறது.
புதுவையில் கொரோனா தொற்று சமூக பரவல் ஆகிவிட்டது என்று கூறமுடியாது. சமூக பரவல் ஆகிவிடாமல் இருக்க அனைவரும் உதவிட வேண்டும். வீட்டில் இருந்தாலும் கூட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.