சுற்றுலா தலங்களில் ஓட்டல், வாடகை வாகன தொழில்களை 3 மாதங்களாக முடக்கிய கொரோனா

கொரோனாவால் சுற்றுலா தலங்களில் ஓட்டல், வாடகை வாகன தொழில்களை கடந்த 3 மாதத்துக்கும் மேலாக கொரோனா முடக்கி வைத்துள்ளது.
சுற்றுலா தலங்களில் ஓட்டல், வாடகை வாகன தொழில்களை 3 மாதங்களாக முடக்கிய கொரோனா
Published on

ராமேசுவரம்,

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ராமேசுவரம், அக்னிதீர்த்த கடற்கரை, கோவில் ரதவீதிகள், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை சாலை மற்றும் கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், வில்லூண்டி தீர்த்த கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இவைதவிர கடல் மீது அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம், குந்துகால் கடற்கரை, விவேகானந்தர் மணிமண்டபம், அப்துல்கலாம் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதேபோல் மாவட்டத்தில் அதிக சவுக்கு மரங்களை கொண்ட அரியமான் கடற்கரை, மண்டபம் கடற்கரை பூங்கா, நவபாஷாணம் அமைந்துள்ள தேவிபட்டினம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை கோவில், ஏர்வாடி தர்கா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலம் மற்றும் சுற்றுலாத்தலங்களும் வெறிச்சோடுகின்றன.

தவிப்பு

இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

எனவே சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் ஏராளமான வியாபாரிகளும், ஓட்டல் வைத்துள்ளவர்களும், ஆட்டோ, வாடகை வாகன ஓட்டுனர்களும் வருமானமின்றி தவித்துவருகின்றனர். நாளுக்குநாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வழக்கமான நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com