

வீரபாண்டி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது திருப்பூர் புறநகர் பகுதியான வீரபாண்டி, ஆண்டிபாளையம், இடுவம்பாளையம், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடமாடும் கொரோனா தடுப்பு மருத்துவர்கள் குழுவினர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி மருத்துவர்கள் குழுவினர் கூறுகையில், கடந்த 2 நாட்களாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளிடம் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டம் புறநகர் பகுதிகளில் அதிக கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவழைத்து தற்போது பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் கட்டாயமாக இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.