கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி

கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி
Published on

பூந்தமல்லி,

சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த 47 வயதான அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். திடீரென்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு நேற்று அதிகாலை அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அ.தி. மு.க. நிர்வாகி உயிரிழந்தார். கடந்த மாதம் இவருக்கு அம்மை நோய் ஏற்பட்டு உடல்நிலை சீராகி வந்த நிலையில் திடீரென்று அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இதனால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியா னார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் இறந்தது உறுதியானது.

பலியான அந்த பெண்ணின் மூத்த சகோதரி நேற்று முன்தினம் வயிற்றுப்போக்கால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர் தலைமையில் சுகாதார துறையினர் ஆரணி பஜார் வீதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆரணி பஜார் வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com