கிருஷ்ணகிரியில் முதல் முறையாக, முதியவருக்கு கொரோனா தொற்று: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கிருஷ்ணகிரியில் முதல் முறையாக, முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் முதல் முறையாக, முதியவருக்கு கொரோனா தொற்று: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

கிருஷ்ணகிரி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பிய முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 67 வயது முதியவர். விவசாயி. இவரும் இவரது உறவினர்களான கிருஷ்ணகிரி பழையபேட்டை நல்லதம்பி தெரு, பங்காளி தெரு, பாலாஜி நகர் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 4 பேர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்களால் அங்கிருந்து வர முடியவில்லை. இந்த நிலையில் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு வருவதற்காக பாஸ் பெற்று, வர முடிவு செய்தனர். இதையடுத்து காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் காரில் புட்டபர்த்தி சென்றார். அங்கிருந்து கடந்த 25-ந் தேதி அவர்களை ஊருக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் நல்லூருக்கு முதியவர் திரும்பிய தகவலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தெரிவித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நல்லூர் கிராமத்திற்கு சென்று முதியவரை பரிசோதனை செய்தனர். அவரது சளி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வந்தது. அதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் விசாரித்தபோது காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த டிரைவர் உதவியுடன் தானும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 பேரும் வந்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி பழையபேட்டை நல்லதம்பி தெரு, பங்காளி தெரு, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் முதியவருடன் புட்டபர்த்திக்கு சென்றிருந்த 3 பேரையும் பரிசோதனை செய்து, அவர்களின் ரத்த, சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை அழைத்து வந்த காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவை சேர்ந்த டிரைவரின் ரத்த, சளி மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் உள்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த 27 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நல்லூர் கிராமம், காவேரிப்பட்டணம் சண்முக செட்டி தெரு, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள 3 தெருக்கள் என அந்த பகுதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வெளி நபர்கள் அங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆந்திரா சென்று கிருஷ்ணகிரிக்கு திரும்பிய முதியவருக்கு கொரோனா இருப்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com