அமராவதிபுதூரில் கொரோனா சிகிச்சை வார்டு - கலெக்டர் ஆய்வு

அமராவதிபுதூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டில் கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.
அமராவதிபுதூரில் கொரோனா சிகிச்சை வார்டு - கலெக்டர் ஆய்வு
Published on

காரைக்குடி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சானிடோரியம் மருத்துவ வளாகத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரசை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக தனி வார்டுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இளையான்குடியில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அவர்களை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், இந்த மருத்துவ வளாகத்தில் 100 வார்டுகள் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் பணிகள் முடிவடையும். இதேபோல் மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்படும் மருத்துவ மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது டாக்டர் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சமூக ஆர்வலர் அயோத்தி உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com