மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லாரி அதிபர்கள் கலந்து கொண்ட கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் லாரிகள் அதிகமாக உள்ளன. எனவே லாரி சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் கருத்துகளை எடுத்து கூறி உள்ளோம். வெளியூர் சென்று திரும்பும் லாரி டிரைவர்கள் பரிசோதனை செய்து விட்டு தான் வீட்டுக்கு போக வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. எதிர்காலத்தில் இதன் தாக்கம் வர கூடாது என்பதற்காக லாரி சங்க நிர்வாகிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

முழு ஊரடங்கை பொறுத்த வரையில் அது அரசின் கொள்கை முடிவு. நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 49 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூரண மதுவிலக்கு அரசின் கொள்கை முடிவு. தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்தி முடிவு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com