ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரசும், அதிகாரிகளும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தொற்று பரவலை தடுக்க முடியும். முதல் கட்டமாக கொரோனா பரவியபோது, ஈரோடு மாவட்ட நிர்வாகம், காவல்துறை எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தொற்று வேகம் குறைக்கப்பட்டதுடன், 70 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால், 2-வது கட்டமாக ஆங்காங்கே ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கிய பாதிப்பு தற்போது 30-ஐ கடந்திருக்கிறது. தற்போது பாதிப்பு 100-ஐ தொட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட பாதிப்பு 96 ஆக இருந்தது. அதில் 2 பேரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. நேற்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

பரிசோதனை

நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த 50 வயது தந்தை மற்றும் அவருடைய 32 மற்றும் 28 வயது மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 28 வயது வாலிபர் கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலில் இருந்தவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத்தொடர்ந்து தந்தை மற்றும் அண்ணனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நம்பியூரை சேர்ந்த 31 வயது வாலிபர் கோவை சின்னியம்பாளையத்தில் ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். ஆலையில் வேலை செய்த பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டதால் இவராக முன்வந்து பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்த43 வயது பெண் மதுரைக்கு சென்று திரும்பி உள்ளார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதிதாக 6 பேருக்கு தொற்று

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சாதாரண சளி தொல்லை என்று அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் பட்டியலில் 2 பேர் இறந்து விட்டனர். 74 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 24 பேர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 என சதம் கண்டு இருப்பது பெருமைக்கு உரியது இல்லை. எனவே பொதுமக்கள் மேலும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com