அனகாபுத்தூரில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

அனகாபுத்தூரில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அனகாபுத்தூரில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அனகாபுத்தூரில் வசிக்கும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பல்லாவரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் வசிக்கும் அவருடைய உறவினர்களான 2 பெண்கள், 2 வயது ஆண் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தாம்பரம் நகராட்சி பகுதியில் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர், மருந்து கம்பெனியில் வேலை பார்த்த பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் கீழ்கட்டளை பகுதியில் 5 வயது பெண் குழந்தை உள்பட 2 பேருக்கும், மேடவாக்கம், பரங்கிமலை, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் வீதம் 6 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள அருள் நகர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண், 57 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 36 வயதான ஒருவருக்கும், மறைமலைநகர் சிலப்பதிகாரம் தெருவில் வசிக்கும் 43 வயதான ஒருவருக்கும், மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள சண்முகா நகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களில் 193 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com