கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை: பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது. பார்வையாளர்களுக்கு வருகிற 31–ந்தேதி வரை அனுமதியில்லை.
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை: பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது
Published on

பத்மநாபபுரம்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார்.

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்வார்கள்.

கேரள மாநிலத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளி மாநில சுற்றுலா பயணிகளால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் அந்த பகுதியினரிடையே ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பீதி ஓயும் வரை பத்மநாபபுரம் அரண்மனையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனை நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது. மேலும் அங்கு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், கேரள அரசாணைப்படி, கொரோனா வைரஸ் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனைக்குள் 12ந்தேதி முதல் 3132020 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கன்னியாகுமரி கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை ஆகியவற்றை அவர்கள் படகில் சென்று பார்ப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை படிப்படியாக குறைந்தது.

கன்னியாகுமரியில் ஓட்டல் மற்றும் விடுதிகள் 100க்கும் மேற்பட்டவை உள்ளன. கன்னியாகுமரிக்கு வந்து தங்குவதற்காக ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தவர்கள், அதை ரத்து செய்தனர். இதனால் கன்னியாகுமரியில் படகுத்துறை உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com