மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
Published on

சேலம்,

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேட்பு மனுக்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அரசு வேலை நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பெறப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

2 வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். வீடு, வீடாகச்சென்று தேர்தல் பிரசாரம் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினரும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் செய்யும்போது அதிக அளவில் கூட்டம் சேர்க்காமல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயது வரையிலான தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவச்சான்றிதழ், மற்றும் ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டையுடன் மாநகராட்சி பகுதியில் உள்ள ரெட்டியூர், குமாரசாமிப்பட்டி, அண்ணா மருத்துவமனை, தாதகாப்பட்டி, சுப்பிரமணிய நகர், குகை, கருங்கல்பட்டி மற்றும் அம்மாபேட்டை கனகசபாபதி தெரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com