

கொளத்தூர்,
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலமலை வனப்பகுதியில் ஆண், பெண் பிணங்கள் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் இதுபற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் போலீசார் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு ஆண் பிணமும், ஒரு பெண் பிணமும் கிடந்தன.
இதையடுத்து பிணங்களை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த 2 பேர் பற்றி துப்பு துலங்கியது.
2 பேரும் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை குரும்பைக்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து (வயது 70), அவருடைய மனைவி ஜெயம்மாள் (65) என்று தெரியவந்தது.
2 பேரும் மாயமானதாக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாச்சிமுத்துவும், ஜெயம்மாளும் இறந்தது எப்படி? என்பது பற்றி கொளத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்தார்களா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.