ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் ‘இன்னும் சில மாதங்களில் உதயசூரியன் இருட்டை கிழித்தெறியும்’ - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இன்னும் சில மாதங்களில் உதயசூரியன் இருட்டை கிழித்தெறியும் என்றும், அப்போது ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் ‘இன்னும் சில மாதங்களில் உதயசூரியன் இருட்டை கிழித்தெறியும்’ - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றைவிடவும் பன்மடங்கு கொடுமையான ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் ஊழல் கொள்ளைப் பிடியில் இருந்து, இந்த மாநிலத்தை மீட்டு முன்னேற்ற பாதையில் வளர்த்தெடுத்து காப்பதற்கான ஜனநாயக திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல். ஜனநாயக களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் இயக்கமான தி.மு.க. இந்த கொரோனா பேரிடர் காலத்திலும், தொடக்கம் முதலே தமிழக மக்களுக்கு துணையாக நிற்கிறது.

தி.மு.க. என்பது எப்போதும் மக்களின் இயக்கம். கூவத்தூரில் குனிந்து வளைந்து பதவி வாங்கி, பவிசுகளைச் சேர்த்து கொண்டாடி கூத்தடிக்கும் இயக்கம் அல்ல. ஜனநாயகம் காப்பதற்காக இரண்டு முறை ஆட்சியையே விலையாக கொடுத்த இயக்கம். அதனால்தான் ஜனநாயக களமான சட்டமன்ற தேர்தலுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு, நாள்தோறும் மக்களை நோக்கி கடமை ஆற்றச் சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான தூய செயல்பாட்டின் ஒரு கட்டம்தான், தமிழகம் மீட்போம் என்கிற பெருந்திரள் பொதுக்கூட்ட நிகழ்வுகள்.

பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் செய்யும் ஊழல்கள் பொங்கிப் பெருகி வழிந்தோடுவதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினேன். நெஞ்சில் உரமும், நேர்மை திறமுமின்றி என் மீது தனிப்பட்ட காழ்ப்பினை அள்ளிக்கொட்டியிருக்கிறார் அந்த அமைச்சர். நெருப்பையே அள்ளிக்கொட்டினாலும் ஏந்திக்கொள்ளும் இதயமிது. ஊழல்களில் இருந்து தனது டாடி மூலம் தப்பித்துக்கொள்ளலாம் என அவர் நினைக்கலாம். ஊழலின் நாடியைச் சரியாக பிடித்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சி அமையும்போது அதற்கான சிகிச்சைகள் தேடித் தேடித் திரட்டிக் கிடைத்திடும்.

அந்த அமைச்சர் ஒருவர் மட்டுமல்ல, அமைச்சரவை மொத்தமும் அப்படித்தான் என்பது தமிழ் அகிலத்துக்கும் தெரியும். அதனை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், வழக்கும் தொடுத்து கோர்ட்டில் தி.மு.க. எடுத்துரைத்திருக்கிறது.

தி.மு.க. எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் கோபமும், ஆற்றாமையும், உங்களில் ஒருவனான என்னையும், நம் உயிருக்கு உயிரான கட்சியையும் கொச்சைப்படுத்தி அவதூறான தரம்தாழ்ந்த போஸ்டர்களை இருண்ட நேரத்தில் ஒட்ட வைக்கிறது. குனிந்து தவழ்ந்து முதுகெலும்பை முற்றும் இழந்தவர்களுக்கு துணிச்சல் எங்கே இருக்கும்?. அதனால்தான் அச்சிட்டது யார் என்பதைக்கூட போடாமல், சட்டத்திற்கு புறம்பான முறையிலே திருட்டுத்தனமாக போஸ்டர்களை ஒட்டுகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இருட்டை கிழித்தெறியும் உதயசூரியன். அப்போது இந்த திருட்டுத்தனங்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுமையாக மீட்கப்படும். கொரோனாவின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோதே பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து குடும்ப அட்டைக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதனை அலட்சியப்படுத்திய அ.தி.மு.க அரசு, தீபாவளி பண்டிகையின் காரணமாகவும், தேர்தல் நெருங்குவதாலும், குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் தரவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அதுவும் இல்லை என அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர், இதையும் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அந்த ஒளி, உதயசூரியனால் கிடைக்கும். ஜனநாயக வழியில் தமிழகத்தை மீட்போம். அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அலை அலையான பங்கேற்புடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடக்கட்டும்! தமிழ் மக்களின் பேராதரவுடன், தரணி போற்றத் தமிழகம் மீளட்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com