நிரந்தர பணிமாறுதல் வழங்க கோரி தர்ணா: முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற கர்ப்பிணி சத்துணவு அமைப்பாளர் போலீசாரால் தடுத்து நிறுத்தம்

நிரந்தர பணிமாறுதல் வழங்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட வந்த கர்ப்பிணி சத்துணவு அமைப்பாளர் முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நிரந்தர பணிமாறுதல் வழங்க கோரி தர்ணா: முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற கர்ப்பிணி சத்துணவு அமைப்பாளர் போலீசாரால் தடுத்து நிறுத்தம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி சவிதா (வயது 34) . இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த வந்த சவிதா, சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது நிர்வாக நலன் கருதி சவிதா தற்காலிக பணிமாறுதலாகி இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மீண்டும் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், தனக்கு இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிரந்தரமாக பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று கடந்த 1 ஆண்டுகளாக கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து மனு அளித்திருந்தார். ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் விரக்தியடைந்த சவிதா, கடந்த 21-ந்தேதி இரவு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள சென்றார்.

முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் சவிதா நேற்று முன்தினம் காலை மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று 12 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் நிரந்தர பணிமாறுதல் வழங்கப்படவில்லை. நேற்று 3-வது நாளாக கலெக்டர் அலுவலகத்துக்கு காலை 10.30 மணியளவில் வந்த சவிதாவை போலீசார், அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், என்னுடைய கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்ற சூழ்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று, அவரை சந்திக்க இருக்கிறேன் என்றார். பின்னர் மதியம் தர்ணாவை கைவிட்ட சவிதா கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று, பின்னர் அவர் முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்ற சவிதாவை பெரம்பலூர் போலீசார் கடலூர் மாவட்டம் தொழுதூர் சுங்கச்சாவடியில் வழிமறித்தனர். பின்னர் போலீசார் நிறைமாத கர்ப்பிணியான சவிதாவுக்கு அறிவுரை கூறி, நேற்று இரவு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சவிதாவுக்கு இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிரந்தர பணிமாறுதல் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com