அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஒன்றியக்குழு தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் கடலூரில் பரபரப்பு

கடலூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று கூறி ஒன்றியக்குழு தலைவருடன், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஒன்றியக்குழு தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் கடலூரில் பரபரப்பு
Published on

கடலூர்,

கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி, (கிராம ஊராட்சி) சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கவுன்சிலர் ஞானசவுந்தரி கூறுகையில், சேடப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகரைக்காட்டில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும். சிப்காட்-2 பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

வாக்குவாதம்

கவுன்சிலர் தமிழழகி கூறுகையில், கோண்டூர் வெளிச்செம்மண்டலத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். ராகவேந்திராநகர், வெங்கடாஜலபதி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். இந்திராநகர், செல்வகணபதி நகரில் உள்ள குட்டைகளை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மற்ற கவுன்சிலர்களும், தங்கள் பகுதியில் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று கூறி, ஒன்றியக்குழு தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன், மதிவாணன், கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், மகேஸ்வரி விஜயராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com