சொத்துபத்திரங்களை அடமானமாக வைத்து வீடுகள் கட்டித்தருவதாக காண்டிராக்டர் ரூ.5 கோடி மோசடி

தஞ்சையில் 25 பேரின்சொத்து பத்திரங்களை வங்கியில் அடமானமாக வைத்து வீடுகள் கட்டித்தருவதாக பெண் காண்டிராக்டர் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளார். பணத்தை திருப்பி செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீசு அனுப்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சொத்துபத்திரங்களை அடமானமாக வைத்து வீடுகள் கட்டித்தருவதாக காண்டிராக்டர் ரூ.5 கோடி மோசடி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ரகுமான்நகரை சேர்ந்த பெண் காண்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமாக அந்த பகுதியில் உள்ள இடத்தில் குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தருவதாக கூறி விளம்பரம் செய்தார். அந்த பெண் வீடு வாங்க விரும்புவோருக்கு வங்கியில் கடனும் பெற்றுத்தருவதாக கூறி உள்ளார். இதனை பார்த்த சிலர் அந்த பெண்ணை அணுகினர்.

அப்போது 25 பேருக்கு கடன் உதவி செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து சொத்துபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அதனை தஞ்சையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 25 பேரையும் வாடிக்கையாளராக சேர்த்தார். பின்னர் அவர்களிடம் பெற்ற ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளார். 25 பேரின் பெயரிலும் ரூ.5 கோடி கடன் பெற்று விரைவில் வீடுகள் கட்டித்தருவதாக கூறினார்.

போலீசில் புகார்

ஆனால் அந்த பெண் காண்டிராக்டர் வீடுகள் கட்டிக்கொடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அந்த பெண்ணை அணுகிய போது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 25 பேரும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கிளை மேலாளரை தொடர்பு கொண்டனர். அப்போது, பெண் காண்டிராக்டர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வங்கியில் கடன் கொடுக்கப்பட்டது. மற்றபடி எதுவும் தெரியாது என கூறினார். இதைடுத்து பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசிலும், தஞ்சை தெற்கு போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

மேலும் இதில் வங்கி மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடைய பாதிக்கப்பட்ட 25 பேரும், நாங்கள் வங்கியில் கடன் வாங்க வில்லை. இதில் எங்களுக்கு தொடர்பு கிடையாது என வங்கியில் தெரிவித்துள்ளனர்.

நோட்டீசு அனுப்பியதால் அதிர்ச்சி

இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நேற்று சம்பந்தப்பட்ட வங்கிக்கு வந்து அங்கிருந்த கிளை மேலாளரிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிவித்தனர். இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து பாதிக்கப் பட்டவர்கள், எங்களின் ஆவணங்களை வைத்து கடன் வாங்கிய காண்டிராக்டர் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை வேண்டும். அவர்களிடம் இருந்து ஆவணங்கள், பணம் ஆகியவற்றை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com