நாமக்கல்லில் தம்பதி கொலை: சரண் அடைந்தவரின் நண்பர்களிடம் விசாரணை

நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவரின் நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் தம்பதி கொலை: சரண் அடைந்தவரின் நண்பர்களிடம் விசாரணை
Published on

நாமக்கல்,

நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 27). பழ வியாபாரி. இவரது மனைவி அனிதா (23). காதல் திருமணம் செய்து கொண்ட விமல்ராஜ் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை காமராஜர் நகரில் உள்ள மாமனார் கருப்பசாமி வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி இரவு கருப்பசாமி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கருப்பசாமி, அவரது மகள் அனிதா, மருமகன் விமல்ராஜ் ஆகியோரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் விமல்ராஜ், அனிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த கருப்பசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரட்டை கொலை தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் பழி வாங்குவதற்காக கணவன்-மனைவி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து நாமக்கல்லை சேர்ந்த நிக்கல்சன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

இதற்கிடையே இவ்வழக்கில் நிக்கல்சன் சரண் அடைந்து இருப்பதால், அவரது நண்பர்கள் மூலமாக அவர் இந்த இரட்டை கொலையை செய்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே நிக்கல்சனின் நெருங்கிய நண்பர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் நிக்கல்சனை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இந்த கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரண் அடைந்த நிக்கல்சன் மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com