கூடலூர்- கேரள சாலையில் விரிசல் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை

கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்- கேரள சாலையில் விரிசல் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை
Published on

கூடலூர்,

கேரளா மட்டுமின்றி கூடலூரிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவின் பெருந்தல்மன்னா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரீன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அந்த வழியே சரக்கு லாரிகள் உள்பட கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மேலும் கூடலூர்- கேரள சாலையில் ஏற்பட்ட விரிசல் 80 மீட்டர் நீளத்துக்கும் 2 அடி அகலத்துக்கும் பெரிதாகியது. எனவே அந்த வழியாக கார்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

மழை தொடரும் பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் கூடலூரில் இருந்து வயநாட்டிற்கு வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. தற்போது மலப்புரத்துக்கு செல்லும் சாலையும் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகா மற்றும் ஊட்டியில் இருந்து வந்த சரக்கு லாரிகள் கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர்- கேரள வழியாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கூடலூர் பகுதியில் மழை சேதத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அப்போது கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்த பகுதி மற்றும் தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார்.

பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் விரிசலை விரைந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com