கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்ட தந்தை மற்றொரு மகனின் கதி என்ன?

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களில் ஒருவனை தந்தை மீட்டார். மற்றொரு சிறுவனின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை.
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்ட தந்தை மற்றொரு மகனின் கதி என்ன?
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு சந்துரு, சூர்யா(வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சூர்யா ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை சுப்பிரமணி, நதியா ஆகியோர் தங்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சந்துரு, சூர்யா ஆகியோர் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

ஆற்றில் குளித்தபோது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சந்துருவும், சூர்யாவும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் சந்துருவும், சூர்யாவும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வேகமாக ஓடிச்சென்று ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்த சந்துருவை மீட்டார்.

ஆனால் சூர்யாவை மீட்பதற்குள், அவனை தண்ணீர் இழுத்து சென்றது. இதையடுத்து சந்துருவை கரைக்கு கொண்டு வந்த சுப்பிரமணி, சூர்யா ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். இதையடுத்து அக்கம், பக்கத்தினரும் ஆற்றில் இறங்கி சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சூர்யா கிடைக்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார், அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் வந்து ஆற்றுக்குள் இறங்கி சூர்யாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சூர்யா கிடைக்கவில்லை.

இரவு 7 மணிக்கு பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் சூர்யாவை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் நிறுத்தினர். இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் சூர்யாவை தேடும் பணி தொடரும் என்று அவர்கள் கூறினர். இதனால் சூர்யாவின் கதி என்ன? என்று தெரியாமல் அவனது தாய், தந்தை கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. சூர்யா குளித்த இடத்தில் தான் அரசு மணல் குவாரி செயல்பட்டது என்றும், அந்த பகுதியில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்பட்டதால் ஆழம் அதிகமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com