திம்பம் மலைப்பாதையில் மீண்டும் விபத்து: 200 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது

திம்பம் மலைப்பாதையில் நேற்று மீண்டும் நடந்த விபத்தில் 200 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது.
திம்பம் மலைப்பாதையில் மீண்டும் விபத்து: 200 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது
Published on

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதன் வழியாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, வேன், சரக்கு வாகனம், கனரக வாகனங்கள் போன்றவை சென்று வந்தன.

ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திம்பம் மலைப்பாதை வழியாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. சில நேரம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு மாங்காய் பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி ஒன்று 3-வது வளைவில் சென்றபோது நிலைதடுமாறி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

தாளவாடியில் இருந்து ரிக் லாரி ஒன்று ஆழ்குழாய் கிணறு அமைக்க பயன்படும் எந்திரம் ஒன்றை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் குன்னத்தூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ரிக் லாரியை குன்னத்தூரை சேர்ந்த முருகேசன் (வயது 30) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் காலை 6 மணி அளவில் சென்றபோது நிலைதடுமாறிய லாரி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் ரிக் லாரியில் இருந்த எந்திரமும் சரிந்து கீழே விழுந்தது. இதற்கிடையே லாரியில் இருந்து டிரைவர் முருகேசன் வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு ரிக் லாரி மீட்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் திம்பம் மலைப்பாதை ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com